இளம்பெண்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் யார் என்று தெரியாத இளம்பெண் சந்தேக மரணம் என்று கூறி மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேக மரணம் குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் இளையராஜா அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, அந்த பெண் ஒரு வாலிபருடன் போவது தெரிந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த பெண் மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பதும், அவருடன் சென்றவர் நீடூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த ஐயப்பனை கைது செய்து விசாரித்த போது,
ஐயப்பனுக்கு திருமணமாகி மனைவி இறந்த நிலையில் ஒரு குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. இவருக்கும் விஜயலட்சுமிக்கும் கடந்த ஒருவருடமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஜயலட்சுமி தொடர்ந்து வலியுறுத்தியதால்,
ரயில்வே கேட் பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்றதாகவும் விசாரணையில் தெரிவித்தார். 18 வயது ஆகாத பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும், மாற்று ஜாதியை சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை சட்டத்தின் கீழும்,
கடத்திச் சென்று கொலை செய்தது ஆகிய 3 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்த காவல் துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.