திருமண நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு வெங்காய பூச்செண்டு : நூதன பரிசை அளித்த தோழிகள்!!

508

திருவள்ளூர்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை தூவி அலங்கரித்து திருமண ஜோடிக்கு பரிசாக வெங்காய மாலை தோழிகள் வழங்கியது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா சுவிதா.இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

ஆரணியை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமாருக்கும், ஷீபா சுவிதாவிற்கும் கடந்த வெள்ளியன்று திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் 3 கிலோ வெங்காய தொகுப்பு பையை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 3 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமேடைக்கு கொண்டு வந்து திருமண பரிசாக அளித்தனர்.

திருமண வரவேற்பிற்கு வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் பூச்செண்டு பரிசுப் பொருட்கள் என பலவற்றை வழங்கிய போதிலும் அரசு மருத்துவமனையில் உடன் பணியாற்றிவரும் தோழிகள் வெங்காயத்தை திருமண பரிசாக அளித்தது திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மணமக்களுக்கு திருமண பரிசாக வெங்காயம் அளிக்கப்பட்ட காட்சி சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் காய்கறிகள் பூக்களின் விலை விண்ணைத் தொடும் இந்த வேளையில் பயனுள்ள பரிசு தொகுப்பாக வெங்காயத்தை பூங்கொத்து போன்று அலங்கரித்து வழங்கிய நிகழ்வு உண்மையில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதே போன்று திருமண நிகழ்வு மற்றும் அ ரசியல் விழா மேடைகளில் மலர்மாலை பூங்கொத்துக்கு பதிலாக விலை அதிகமுள்ள வெங்காயம் போன்ற காய்கறிகள் உள்ளிட்டஉணவுப் பொருட்களை பரிசாக வழங்கினால் அவை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..