ஆந்திர மாநிலம்…..
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையபுலங்கா என்னும் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் சாய் நரசிம்மா (வயது 23). சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக் முடித்துள்ள சாய் நரசிம்மாவுக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது.
ஆனால், எம்எஸ் மேற்படிப்பு படிக்க விரும்பிய சாய் நரசிம்மா, தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை உதறி விட்டு அமெரிக்கா செல்லவும் ஆசைப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், மேற்படிப்புக்காக சாய் நரசிம்மாவின் பெற்றோர்கள் அவரை அமெரிக்ககா அனுப்பி வைத்திருந்தனர். அங்குள்ள கனெடிக்ட் என்னும் பகுதியில் தங்கி நரசிம்மா படித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தை சேர்ந்த பிரேம்குமார், வாரங்கல் பகுதியை சேர்ந்த பாவனி உள்ளிட்ட மொத்தம் 7 பேருடன் மினி வேன் ஒன்றில் சாய் நரசிம்மா பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்கள் பயணம் செய்த போது பனி மூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், எதிரே வந்த கன்டெய்னர் லாரி ஒன்றின் மீது சாய் நரசிம்மா உள்ளிட்டோர் பயணித்த வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில் சாய் நரசிம்மா, பிரேம் குமார் மற்றும் பாவனி ஆகியயோர் சம்பவ இடத்திலேயயே பலி ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீதமுள்ள அனைவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதுகுறித்த தகவல் இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் சாய் நரசிம்மாவின் இறப்பு குறித்து அறிந்த அவரது பெற்றோர்கள், கதறி துடித்துள்ளனர். தீபாவளியின் போது தனது குடும்பத்தினர் அனைவருடனும் சாய் நரசிம்மா வீடியோ கால் மூலம் பேசியதையும் உருக்கத்துடன் குறிப்பிட்டு கண்ணீர் வடிக்கின்றனர் குடும்பத்தினர்.
அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும் இளைஞர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.