தீப்பற்றி எரிந்த மின் ஸ்கூட்டர்.. புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை, மகள்!!

257

வேலூர்….

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் துரைவர்மா என்பவர் தனது மகள் மோகன பிரீத்தி மற்றும் மகன் அவினாஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் மோகன பிரீத்தி போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு அவர் தந்தை வீட்டிற்கு வந்தார்.

2 நாட்களுக்கு முன் துரைவர்மா புதிதாக ஒக்கிநாவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரை வாங்கிய நிலையில், இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றியதாக கூறப்படுகிறது. மிகவும் குறுகிய அறைகளை கொண்ட அவரது வீட்டில் ஜன்னல் வசதிகள் சரிவர இல்லை என்ற நிலையில், நேற்று இரவு மகன் அவினாஷ் அதே தெருவில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு சென்ற நிலையில், துரைவர்மாவும் அவரது மகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவரது வீட்டில் இருந்து நள்ளிரவில் புகையும், தீயும் வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்குள்ள கழிவறையில், துரை வர்மாவும், அவரது மகளும் உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், துரை வர்மா வாங்கிய புதிய மின்சார ஸ்கூட்டரில் இரவு முழுவதும் சார்ஜ் ஏறிக்கொண்டே இருந்த நிலையில், நள்ளிரவு 2.30 மணியளவில் திடீரென அதன் பேட்டரி வெடித்தது தெரியவந்தது.

ஸ்கூட்டர் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் அதற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்கும் பற்றி எரிந்ததும், அதில் இருந்து பரவிய தீ , வீட்டில் இருந்த சோபா உள்ளிட்ட பொருட்களுக்கும் பரவியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

வீட்டில் தீப்பற்றி நிலையில், தப்பிக்க எண்ணிய தந்தையும், மகளும், வாசலுக்கு வந்த நிலையில் அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால், கழிவறைக்கு சென்று பதுங்கி நிலையில்,வீடு முழுவதும் சூழ்ந்து கொண்ட புகை மூட்டத்தில் சிக்கி, இருவரும் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

துரை வர்மா வசித்தது சிறிய வீடு என்பதாலும் அதில் ஜன்னல் வசதிகள் சரிவர இல்லை என்பதாலும் வீடு முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டம் இருவரின் உயிரை பறித்திருக்க கூடுமென கூறியுள்ள போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உறுதியாக கூறமுடியுமென்று தெரிவித்தனர்.

இந்நிலையில், மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்ற பயன்படுத்தப்படும் அதன் சார்ஜர் கருவியில் பழுது ஏற்பட்டிருந்தாலோ, அந்த வாகனத்தின் பேட்டரியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருந்தாலோ இது போல் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மின்சார பைக்குகளில் 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் அதிக நேரம் சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அத்துறை தொழில்நுட்பவியலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சென்னை ஆம்பியர் இ-பைக்ஸ் நிறுவன தொழில்நுட்பவியலாளர் விக்னேஷ், மழையில் நனைந்த வாகனத்தை உடனே சார்ஜ் செய்யக்கூடாது என்றார். சார்ஜ் கேபிள் பொருத்தும் போர்ட்டை மழைநீர் படும் வகையில் வைத்திருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெயில் அதிகம் உள்ள இடங்களில் வாகனத்தை நிறுத்தவோ, அங்கு சார்ஜ் செய்யவோ கூடாது என்றும் அவர் கூறினார். அதேபோல், வாகனத்தை வாங்கும்போது கொடுக்கப்படும் கேபிள்களை மட்டுமே பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டும் என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார்.