தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை நேற்று தீவிரமாக முன்னெடுத்தனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையப் பார்த்தனர்.
அவர்களை பொலிசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்களமே போர்க்களமானது. இதையடுத்து தடைகளை மீறி போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நுழைந்தனர். காவல்துறையினர் மற்றும் அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்கள் பலமாக ஒலித்தன.
அந்த முழக்கங்களின் சத்தம் அடங்கும் விதமாக, சற்று நேரத்தில் காவல்துறையினர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் சிதறி ஓட, சிலர் சம்பவ இடத்திலேயே குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராம், தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், சிலோன் கொலனியை சேர்ந்த கந்தையா, தூத்துக்குடி குறுக்குசாலையைச் சேர்ந்த தமிழரசன், மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சண்முகம், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், மணிராஜ் ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் கொடுமையான சம்பவம் என்ன வென்றால், மாணவி வெனிஸ்டா வாயில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த மரணங்கள் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.