பாட்டியை..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணத்திற்கு பின் அவர்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கணவரின் உயிரிழப்பிற்கு பின் வீட்டில் பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டின் உள்ளே பேபிசரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். வீட்டின் உள்ளே கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் ரத்த காயங்களுடன் கீழே மூதாட்டி காணப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இது குறித்து அப்பகுதியினர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி பொதுவாக கதவை மூடியபடி வீட்டில் இருப்பார். தனக்கு தெரிந்த நபர்களை மட்டுமே வீட்டினுள் அனுமதிக்கும் நிலையில், அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலி உட்பட நகைகளை குறிவைத்து வீட்டில் புகுந்த நபர் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விசாரணை மேற்கொண்டார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொலையாளி குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. கொலை தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கொலையை மூதாட்டியின் உறவு முறையில் பேரனான பாஸ்கரன் என்ற புரூஸ்லீ பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.
சிறமடம் பகுதியைச் சேர்ந்த இவர், சமீபகாலமாக மூதாட்டியின் வீட்டருகே குடும்பத்தோடு வாடகைக்கு வசித்து வருகிறார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது அவரது வீட்டிற்குச் சென்று செய்து வந்த புரூஸ்லீ பாஸ்கரன், நேற்று மது போதையில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மூதாட்டியின் நகை மீது ஆசை ஏற்பட்டு கொலை செய்து விட்டு நகைய திருடியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.