தான் மனநல காப்பகத்தில் இருந்ததாக பிரபல நகைச்சுவை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். கபில் சர்மாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சித்தார்த் சாகர். அவரை கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரின் குடும்பத்தாரும் அது குறித்து சரியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் சித்தார்த் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் குடும்பத்தார் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நானே உங்கள் முன்பு வந்து அனைத்து உண்மையையும் தெரிவிக்கிறேன் என்று சித்தார்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருப்பது தெரியாது. என் தாயும், தந்தையும் பிரிந்துவிட்டனர். நான் என் தாயுடன் மும்பையில் தங்கியுள்ளேன். என் தாய் சுயாஷ் என்ற நபரை சந்தித்தார். அவருக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன். ஆனால் அந்த சுயாஷ் என் தாயை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை.
எனக்கு பைபோலார் பிரச்சனை இல்லை. அப்படி இருந்தும் என் பெற்றோர் பைபோலார் குறைபாட்டிற்கான மருந்தை உணவில் கலந்து எனக்கு கொடுத்து வந்துள்ளனர். எனக்கும் சுயாஷுக்கும் இடையே சண்டை வந்தது.
சுயாஷும், அம்மாவும் சேர்ந்து என்னை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். அங்கு என்னை சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தினார்கள். எனக்கு இல்லாத பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளித்தனர். என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு நான் பலரை கேட்டும் பலனில்லை என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சித்தார்த்தின் தோழியான சோமி சாக்சேனா என்பவரின் ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் தான் சித்தார்த் மாயமானது தெரிய வந்தது. பின்னர் சோமி அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.