கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த சிறுவனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் – காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற கூலித் தொழிலாளியின் 11 வயது மகனே பாம்பு கடிக்கு இழக்காகியுள்ளார்.
இந்த சம்பவம், கடந்த 25ஆம் திகதி இரவு நள்ளிரவு இடம் பெற்றுள்ளது.காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் விஜயகுமார் தனது மனைவி, மகனுடன் படுத்து தூங்கினார். முட்புதர் அடர்ந்த பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சுற்றிதிரியும்.
நள்ளிரவு 1 மணி அளவில் 8 அடியை விட பெரியதாக கொடிய விஷம் கொண்ட ஒரு கட்டுவிரியன் பாம்பு தூங்கி கொண்டிருந்த சிறுவன் சுனிலை கடித்தது. அலறியடித்து எழுந்த சிறுவன் சத்தம் போட்டு கதறி அழுதான்.
பெற்றோர் திடுக்கிட்டு பதறி எழுந்து பார்த்தபோது, பாம்பை கண்டு நடுங்கினர்.பிறகு பெரிய கட்டையை எடுத்து பாம்பை அடித்து கொன்றனர். பாம்பை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு மகனை பைக்கில் ஏற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
சிறுவன் சுனில் சுய நினைவை இழந்தான். சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமானதால், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்த 1 மணி நேரத்தில் (26ஆம் திகதி அதிகாலை 3.30 மணி) கொண்டு வந்து அனுமதித்தனர்.
உடனடியாக, குழந்தை நல டாக்டர் பேராசிரியர் தேரணி ராஜன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், சுய நினைவை இழந்த சிறுவன் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கொடிய விஷத்தை முறிக்கும் மருந்தையும் கொடுத்தனர்.
உயிர் போகும் கடைசி நேரத்தில் சிறுவன் காப்பற்றப்பட்டுள்ளான். பாம்பு கடிக்கு அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் குறித்த மருத்துவமனைக்கும் உயிரை காப்பாற்றிய வைத்தியர்களுக்கும் சிறுவனின் குடும்பம் நன்றி கூறியுள்ளனர்.