நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன்! அதனால் இவ்வாறு செய்தேன்… வள்ளியின் வாக்குமூலம்!!

687

சிவகாசியில் கணேசன், முகமது இப்ராஹிம், முருகன் கௌதம், சரவணன், அந்தோனி ராஜ், ஹரிஹரன் உட்பட 7 பேர் மதுபானம் அருந்தியதில், 4 பேர் வாயில் நுரை தள்ளி இறந்துபோயுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக வேலை பார்ப்பதால், வேலை முடித்துவிட்டு மது வாங்கி ஒன்றாக அருந்தியுள்ளனர். மேலும், மது அருந்துவதற்கு முன்னர் முருகன் வீட்டில் சமைத்த சாப்பாட்டையும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

மது அருந்தியவர்களில் 6 பேர் வாயில் நுரை தள்ளியது, இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிவகாசியில் உள்ள மதுபான அரசு கடையில் மது வாங்கி அருந்திய காரணத்தால், மதுகுடித்துதான் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கருதி உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பாக குவிந்தனர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் உடலில் இருந்த உணவை பரிசோதித்ததில், அதில் விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

மது குடிக்கும் போது அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்தது யார் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலியான முருகனின் சகோதரி வள்ளி என்பவரும், அவரது காதலரான அச்சக ஊழியர் செல்வம் என்பவரும் உணவில் மது கலந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட வள்ளி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை பிரிந்து வாழும் நான், செல்வம் மீது காதல் வயப்பட்டேன், இதனை சகோதரர் முருகன் கண்டித்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு, உணவில் விஷம் கலந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து வள்ளி மற்றும் செல்வத்தை கைது செய்துள்ள பொலிசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.