நீங்கள் செய்த உதவியால் இந்தியா பெருமையடைந்துள்ளது : இளம் மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!!

654

இளம் மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்…..

இந்தியா மாணவியை அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் பாராட்டியிருப்பதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

கேரளாவின், கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த தம்பதி லல்லிசென் மல்லிசேரி-ஆன்சி பிலிப். இவர்களுக்கு ஷேரன் வர்கீஸ் என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஷேரன் வர்கீஸ் அவுஸ்திரேலியாவிற்கு படிக்க சென்றார்.

அங்கிருக்கும் வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்த, இவர் அதன் பின் அங்கு அவருக்கு செவிலியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், ஷேரன் வர்கீஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார். இவருடன் பல நாடுகளைச் சேர்ந்த செவிலியர் மாணவர்களும் பணியாற்றிவந்தார்கள்.

படிக்கும்போதே ஷேரனுக்கு சேவை, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபாடு இருந்திருக்கிறது. இதன் காரணமாக, நண்பர்களின் துணையுடன் வி பிலாங் காங் என்ற வீடியோவை 2016-ஆம் ஆண்டு எடுத்தார்.

அது, அவரது கல்லூரியில் பரவலாகப் பேசப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் உள்ள வானொலியில், பாட்டுப் பெட்டி என்ற மலையாள நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார்.

முதியோர் இல்லத்தில் பணியாற்றியபோது கொரோனா தொடங்கியது. இதனால் அவுஸ்திரேலிய அரசு, முதியோர் வசிக்கும் இடங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொரோனா நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.

ஷேரன், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வராமல் தடுத்ததுடன், உள்ளேயே தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.

இதன் மூலம், நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாக்கக் காரணமாக இருந்தார். கொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம் குறித்து வீடியோ வெளியிடுமாறு அவுஸ்திரேலியாவின் வர்த்தகம், கல்வி மற்றும் முதலீட்டுக்கான அரசு அமைப்பான ஆஸ்டிரேட் அழைப்பு விடுத்திருந்தது.

அதில், ஷேரன் தன் பணிகள் குறித்து பேசுகையில், கிரீன்ஹெல் மேனர் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம்.

ஷிப்ட் முறையில் பணிக்கு வருபவர்களின் உடை மூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம். நீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம்.

முதியோர்களின் உறவினர்கள் வந்து பார்க்க ஆரம்பத்தில் அனுமதித்தாலும், நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம் என்று கூறியிருந்தார்.

இவரின் பணியை, ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது. அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சகாப்தமாக விளங்கும் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.

அதில், உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன். இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது. நீங்கள் செய்திருக்கும் இந்த உதவியால், இந்தியாவுக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறினார்.

இதைக் கேட்ட ஷேரன் வர்கீஸ் , என் தந்தை ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பதால் ஆடம் கில்கிறிஸ்ட் என்னைப் பாராட்டியிருப்பது என் தந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் பெருமையாக இருக்கிறது.

என் சகோதரியும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். என தம்பியும் அவனது நண்பர்களும் கில்கிறிஸ்ட் ரசிகர்கள். அதனால் அவர்கள் எனக்குக் கிடைத்த வாழ்த்தைக் கொண்டாடி மகிழ்ந்தாக குறிப்பிட்டார்.