கொல்லம்….
கொல்லம் அருகே உள்ள கம்பம் கோடு பகுதியை சேர்ந்தவர் சஜி. இவர் சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சஜி மேய்ச்சலுக்காக விட்டு இருந்த மாட்டை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏற்கனவே இதேபோன்று 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் திருடு போன புகார்கள் இருந்ததால் விசாரணையை முடுக்கி விட்டனர்.
விசாரணையில், காணாமல் போன பசுமாடுகளை கொல்லம் மாவட்டம் விதுரா பகுதியை சேர்ந்த நஜீப் என்ற நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நஜீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது நஜீப் மற்றும் அவரது தந்தை கமருதீன் மற்றும் ஹிலாரி ஆகியோர் பசுமாடுகளை திருடி சென்று, அவற்றை கொன்று அதன் இறைச்சியை ‘ஹங்கிரி கேப்டன்’ என்ற யூ-டியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சிக்கு உபயோகித்து மாட்டு இறைச்சி சமையல் எப்படி செய்வது குறித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து பசுமாடுகளை கடத்தி சென்று அதனை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
யூ-டியூப் சேனல் நடத்துவதற்காக பசுமாடுகளை திருடி கொன்று சமையல் நிகழ்ச்சி நடத்திய சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.