தஞ்சாவூரில்…
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்களிடையே பரவியிருக்கும் மூடநம்பிக்கை மட்டும் அகலவில்லை. சாதாரண பூஜை தொடங்கி உயிர்களைப் பலி கொடுக்கும் நரபலி வரை மக்கள் எதற்கும் துணிகிறார்கள்.
இவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி மந்திரவாதிகள் என சொல்லிக்கொள்ளும் போலிகளும் நல்ல காசு பார்க்கின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரில் 6 வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த தம்பதி நசுருதீன்(32) – ஷாலிஹா (24).
இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். 6 மாத பெண் குழந்தையும் இருந்தது. இச்சூழலில் நேற்று முன்தினத்திலிருந்து குழந்தையைக் காணவில்லை. அப்போது பெற்றோர் குழந்தையைத் தேடும்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நினைத்த பெற்றோர், இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர்.
தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தையின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் குழந்தையின் பெற்றோர், அவர்களின் உறவினர்கள் என பலரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் நசுருதீனின் சித்தி ஷர்மிளாபேகமும் சித்தப்பா அசாருதீனும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பயமடைந்த அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அசாருதீனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கேரள மந்திரவாதி முகமது சலீம் (48) என்பவரிடம் ஷர்மிளாபேகம் குறி கேட்டு உள்ளார். அவர் உயிர் பலி தர வேண்டும் என கூறியதால் 6 மாத பெண் குழந்தையை கடந்த 15-ம் தேதி தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளனர். இதையடுத்து ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.