படுக்கை அறையில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

222

விஜயநகர்….

படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

நோய் தாக்கி ,உடல்நலக் குறைவால் உயிரிழப்பவர்களை காட்டிலும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம் அந்த வகையில் பல்வேறு விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துக்கள் பல வகையில் நடந்து வருகிறது.

விபத்துக்கள் படிப்பினைகளை இந்த சமூகத்திற்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது, ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை என்பதே அடுத்தடுத்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்த வரிசையில்தான் கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹோசப்பேட்டை தாலுக்காவில் மாரியம்மனை ஹள்ளியில் துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் பிரசாத் (42) அவரது மனைவி சந்திரகலா (38) மற்றும் அவரது மகன்கள் ஹர்துவிக் (16), பிரேரனா( 8 )என்ற மகன்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த குடும்பம் ராகவேந்திரா ஷெட்டி என்பவரின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வீட்டில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டது, ஏசி வெடித்ததில் வீடு முழுவதும் தீ மளமளவென பரவியது, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது, இதைப்பார்த்த ராகவேந்திரா ஷெட்டி மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.

ஆனால் வெங்கட் பிரசாத் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். நால்வரும் வீட்டிலிருந்து வெளியில் வரமுடியாமல் தீயில் உயிருடன் எறிந்தது சம்பவம் நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹோசப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கசிவால் ஏசி வெடித்ததா? தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி பிரசாத் குடும்பத்தினர் உயிரிழந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் திடீரென மின்சாரத்தை துண்டித்து விபத்துக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.