பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் : ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

1229

சிதம்பரம்…….

சிதம்பரம் அருகே கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் மாணவன் பஸ் ஸ்டாண்டில் வைத்து தாலி கட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில்,

அந்த வீடியோவில் இருப்பது சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதும், அவருக்கு சிதம்பரம் வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் தாலி கட்டியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நகர காவல் நிலைய போலீசார் மாணவனை கைது செய்தனர். மாணவியை அரசு காப்பகத்தில் அடைத்தனர். இந்த நிலையில், தனது மகளை எதற்காக காப்பகத்தில் அடைத்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்கா ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியை சட்ட விரோதமாக காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதிய நீதிபதிகள்,

உடனடியாக மாணவியை விடுவித்து அவரது பெற்றோருடன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, மாணவியை அவரது தாயிடம் ஒப்படைத்துவிட்டதாக மாவட்ட குழந்தைகள் நல குழு தெரிவித்தது.

இருப்பினும், சரியாக விசாரணை நடத்தாமல் மாணவியை காப்பகத்தில் அடைத்ததற்கும், மாணவன் மீது வழக்கு பதிவு செய்ததற்கும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், மாணவன் மீது எடுக்கப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கைகளை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.