சமன்வி..
பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற 6 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், அவரது மகள் சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த ஒரு லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. லாரி மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமன்வி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, கண்முன்னே உயிரிழந்த தனது மகள் சமன்வியின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமன்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மஞ்சேகவுடா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை முந்திச்செல்ல முயன்ற போது,
எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியதாக லாரி டிரைவர் தெரிவித்து இருந்தார். மேலும், விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்த போலீசார், கைதான லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.