பிறந்த குழந்தையை தாயே விற்ற கொடுமை : மனதை உலுக்கிய சம்பவம்!!

468

சென்னை…

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.

அதில் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த உதயா வயது 29 என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றுள்ளதாகவும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தார். விசாரணையில் அந்தப் பெண் உதயா தனது கணவர் மணிகண்டன் என்பவருடன் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வந்ததாகவும் இவருக்கு 7 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.

அதன்பறகு கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு உதயா திருமணம் செய்து கொள்ளாமல் பாபு என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை ஆதி என்ற பெண் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து தொடர்ந்து இந்த வழக்கில் ஆர்வம் காட்டிய செம்பியம் போலீசார் ஆதி இடமிருந்து குழந்தையை விற்க துணையாக இருந்த ஜான்சிராணி உள்ளிட்ட நபர்களை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் குழந்தை ஈரோடு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல்-சவிதா தம்பதியினருக்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு கவிதா என்ற பெண் துணையாக இருந்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் சவிதா தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்பியுள்ளனர். இதுகுறித்து தங்களுக்கு தெரிந்த சிலரிடம் சொல்லி வைத்துள்ளனர்.

அந்த வகையில் அவர்களுக்கு அறிமுகமான கவிதா என்பவர் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஜான்சி ராணி என்பவர் அறிமுகமாகி அவர் மூலமாக குழந்தை கைமாறியது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

செம்பியம் போலீசார் ஜான்சிராணியை நேரில் அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கவிதாவைப் பிடித்து அவர் மூலமாக தங்கவேல் மற்றும் சவிதா ஆகியோரை பிடித்துள்ளனர்.

இதன் மூலம் நான்கு மாதக் குழந்தையாக வளரும் சத்யசரண் என்ற குழந்தையையும் மீட்டு நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை விற்ற தாய் உதயா அதற்கு உடந்தையாக இருந்த ஜான்சிரணி குழந்தையை வாங்கிய சவிதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.