வேலூர்….
பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினித் (23). நேற்று நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின்,
உறவினர்களான அசோகன் (44) மற்றும் அவருடைய மகன் ஆகாஷ் (23) ஆகியோர் ஒன்று கூடி ஒலிபெருக்கியில் சப்தத்தை அதிகமாக வைத்து அருகில் இருப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி மலர் (36) அவர்களிடம் சப்தத்தை குறைக்க கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அசோகன் மற்றும் ஆகாஷ் மலரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
தொடர்ந்து மலரின் மகள் கண்ணகி (18) சமாதானம் செய்வதற்காக வந்த போது அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி உள்ளனர்.
இதனை தொடர்ந்து வினித் (23) சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆகாஷ் மற்றும் அசோகன் ஆகிய இருவரும் கூர்மையான ஆயுத்தத்தால் மார்புப்பகுதியில் வினித்தை குத்தி உள்ளார்.
இதனால், நிலைகுலைந்த வினித் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வினித்தின் தாயார் மலர் அளித்த புகாரின் பேரில் மேல்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜன் பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அசோகன், ஆகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு இருவரும் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.