திருச்சி….
திருச்சியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியின் கள்ளக்காதல் இருப்பதும் விசாரணையின் அம்பலமானது.
திருச்சி மாநகரம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் நகரில் வசித்தவர் முத்துக்குமார் (35). பேக்கரி கடை மாஸ்டர். இவரது மனைவி சந்தியா (24). திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள், திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றை, ஒப்பந்த அடிப்படையில் (லீஸ்) நடத்தி வந்தனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு லீஸ் காலம் முடிந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து தம்பதியினர் இருவரும் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். தாங்கள் குடியிருந்த மேல் மாடி வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ராவுத்தன் பட்டிக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் தம்பதியினர் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, “உங்கள் வீட்டில் குடியிருந்த சந்தியாவை, அவர்களது குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்” என்று தகவல் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர், ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூட்டியிருந்த வீடும், வீட்டிற்குள் சிதறி கிடந்த ரத்தமும், அதனருகில் கிடந்த ரத்தம் தோய்ந்த சட்டையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது கொலையாக இருக்கலாம் என்று எண்ணி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் போலீசாருக்கு குழப்பமே மிஞ்சியது. முத்துக்குமார்- சந்தியா தம்பதியினர் மொபைல் எண்கள் அணைக்கப்பட்டு இருந்ததால், போலீசாரின் டென்ஷன் எகிறியது. அதையடுத்து, போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஒரு வாலிபர் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடந்த விசாரணையில், அந்த வாலிபர் பேக்கரியை லீஸூக்கு விட்ட, துரை பாலன் (26) என்பது தெரிய வந்தது. வீட்டு உரிமையாளரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதும் அவர்தா என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், சந்தியாவிற்கும் அவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாகவும், அவரிடம் சொல்லாமல் சந்தியா சென்று விட்டதால், அவரைக் காண முடியாமல் தவித்ததாகவும்கூறியிருக்கிறார்.
மேலும், ‘சந்தியாவை இங்கு வரவழைப்பதற்காகவே கறிக்கடையில் இருந்து ஆட்டு ரத்தத்தை வாங்கி வந்து, பால்கனி வழியாக உள்ளே இறங்கி வீட்டிற்குள் ரத்தத்தை தெளித்தாகவும்’ தெரிவித்துள்ளார்.
திருமணமாகாத துரைபாலன், கள்ளக்காதல் மோகத்தின் உச்சத்தில் இருப்பதை அறிந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாமா? அல்லது அவரை மனநலக் காப்பகத்திற்கு அனுப்பலாமா? என்று போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.