பூமியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் : எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!

1205

நாம் வாழும் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த கால நில நடுக்கங்களையும் இனி அவை ஏற்பட இருக்கும் சாத்தியக்கூறுகளையும் வைத்து நிலநடுக்கம் தொடர்பாக கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக் ஆகியோர் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர்.

இதில் பூமி சுற்றிவரும் வேகத்துக்கும், தினசரி நாள் அளவுக்கும் நிலநடுக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் சுழற்சி வேகம் எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போது நில அதிர்வுகள், நில நடுக்கங்கள் அதிகரிக்கின்றன.
பூமியின் சுழற்சி வேகத்துக்கும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பை ஆணித்தரமாகத் தீர்மானிக்க முடியாவிட்டாலும் அது ஓரளவு உண்மை.

பூமியின் சுழற்சி வேகம் வழக்கத்தைவிட மைக்ரோ மில்லி செகண்டுகளே குறைகின்றன. இருப்பினும் அதன் தாக்கத்தால் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுபோன்ற நில நடுக்கங்கள் அதிகம் உண்டாகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களை ஆய்வு செய்ததில் 2018 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஐந்தாறு ஆண்டுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.