வேலூர்….
வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (30). இவர் வேலூரில் ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த 2010 இல் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து இரு குழந்தைகள் உள்ளது. 2017 இல் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த இந்துமதி கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியை அயராமல் செய்து வந்துள்ளார்.
வேலூரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த இந்துமதி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பணிக்கு சென்று மாலை 2 மணிக்கு குடியிருப்புக்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் இரவு பணிக்கு இந்துமதி வராததால், சக காவலர்கள் இந்துமதியின் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால், இந்துமதியின் செல்போன் சிக்னல், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து ஆயுதப்படை தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்துமதியின் வீட்டுக்கும் தகவல் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு முதலில் வந்த இந்துமதியின் தம்பி, வீட்டின் கதவை தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது இந்துமதி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் தகவல் அறிந்து வந்த வேலூர் தெற்கு போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், குடும்ப பிரச்சினையில் இந்துமதி தற்கொலை செய்துகொண்டாரா? தேர்தல் பணி மன அழுத்தமா? ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.