பெற்றோர் ரோடு போடும் தொழிலாளர்கள்… மகள் இந்திய அணியின் கேப்டன் : விடாமுயற்சியால் வறுமையை வீழ்த்திய இளம் பெண்!!

1342

ஜார்கண்ட்….

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் அஸ்தம். இந்த கிராமத்தை சேர்ந்த ஹீரலால் ஓரான் மற்றும் தாரா தேவி தம்பதிக்கு மூன்றாவது மகளாக பிறந்த அஸ்தம், தனது விடா முயற்சின் மூலமாக இன்று 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியினை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்த அஸ்தமின் பெற்றோர் விவசாய கூலி வேலை செய்துவருகின்றனர். அஸ்தமிற்கு 4 சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளார்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் துவங்கியுள்ளன. இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக விளையாடி வருகிறார் அஸ்தம். முதல் போட்டியில் வல்லமை வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் மொரோக்கா அணியை எதிர்த்து களம்காண்கிறது இந்தியா.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அஸ்தம் விளையாடிவரும் இந்நிலையில், அவருடைய கிராமத்திற்கு முதன்முதலாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் அஸ்தமின் பெற்றோர்களும் 250 ரூபாய் ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். விடாமுயற்சியால் வறுமையான பின்புலத்தில் இருந்து இத்தனை பெரிய உயரத்திற்கு உயர்ந்த அஸ்தமை உள்ளூர் மக்கள் பாராட்டிவருவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு டிவி மற்றும் இன்வெட்டரை அன்பு பரிசாக வழங்கியுள்ளனர் கிராம மக்கள்.

சிறுவயதில் இருந்தே கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஸ்தம், பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார். ஹசாரிபாக்கில் உள்ள அரசு நடத்தும் கால்பந்து அகாடமியில் தனது கிராமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்தம்.

அஸ்தம் ஓரானின் வெற்றி, அவரது சிறிய கிராமத்தை அதிகாரிகள் கவனிக்கும்படியும் செய்திருக்கிறது. கும்லா மாவட்ட நிர்வாகம் கொரடோல்லியில் கால்பந்து மைதானம் கட்ட ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்கீழ் கும்லா கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.