பேஸ்புக்கில் சிறுமிக்கு காதல் வலை : இளைஞர் சிக்கியது எப்படி?

607

சென்னையில் சிறுமியை ஏமாற்றி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், தனது பெயர் மற்றவர்களை கவரும்படி இருக்க வேண்டும் என எண்ணி பேஸ்புக்கில் வில்லியம்ஸ் குமார் என்ற பெயரில் கணக்கு துவங்கி ஏராளமான கல்லுரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பெண்களை கவர்ந்திழுக்கும் விதமாக அடிக்கடி புதுவித தோற்றங்களில் இருப்பதை போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.

இதில் மயங்கி, ராகுல் விரித்த காதல் வலையில் விழுந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், ராகுலுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி தன்னை முழுமையாக நம்புவதை உணர்ந்த ராகுல், புதிதாக தொழில் துவங்க வேண்டும் எனவும், அதற்கு சிறிதளவு பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதனை நம்பி சிறுமியும் வீட்டிலிருந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து ராகுலிடம் கொடுத்த வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வீட்டில் இருந்த 20 சவரன் நகை காணமல் போயிருப்பதை கண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அதில் உண்மை வெளிவரவே சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.