தருமபுரி….
தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (24). பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் டெல்லி திகார் சிறையில் எட்டாவது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்யும் போது எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை வரதட்சணை என்பது தேவையில்லை என்றுதான் விக்னேஷ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், திருமணம் நடந்த பின்பு விக்னேஷின் தாயார் என் மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருவதால் 50 சவரன் நகை வரதட்சணையாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து வேறு வழியில்லாமல் நிவேதாவின் குடும்பத்தினர் நிவேதாவிற்கு 30 ச்வரனும் மாப்பிள்ளை விக்னேஷ்க்கு 3 சவரன் நகையும் கொடுத்து ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
மேலும், கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், விக்னேஷின் தாய் தந்தை மற்றும் தங்கை இவர்களின் பேச்சை கேட்டு அடிக்கடி பணம் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் நிவேதா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விக்னேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், விக்னேஷ் காவலராக பணிபுரிந்து வருவதால் காவல் நிலையங்களில் பேசி முடித்து விடுவதாகவும் நிவேதா தரப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், விக்னேஷுக்கு இரண்டாவது திருமணமும் செய்துவிட்ட நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிவேதா தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த மாதம் 11 ஆம் தேதி எனது கணவரின் குடும்பத்தார் சேர்ந்து எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் தற்போது என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை என் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் நிவேதா புகார் மனுவை அளித்துள்ளார்.