இந்தியா………….
இந்தியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகனுக்காக தந்தை ஒருவர் 10 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, அயான்ஷ் குப்தா என்ற மகன் உள்ளார். அயான்ஷ் குப்தா ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி எனப்படும் அரிய வகை மரபணு நோயால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டார்.
முறையான சிகிச்சையை உடனடியாக துவங்காவிட்டால், அந்த சிறுவன் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உடல் தசைகளை வலுவிழக்க செய்யும் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்களை அசைக்க முடியாது. சுயமாக எழவோ, உட்காரவோ, நடக்கவோ முடியாது.
உணவு உட்கொள்வதே அவர்களுக்கு மிக கடினமாக இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுவனின் சிகிச்சைக்கு, ஸால்ஜென்ஸ்மா என்ற மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் இது ஒரு டோஸ், 16 கோடி ரூபாய் என்பது தெரியவந்ததால், யோகேஷ், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
பின், சமூக வலைதளங்கள் வாயிலாக, மகனின் சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்ட முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில், சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு வழியிலும், நன்கொடை திரட்டும் பணியை துவக்கினார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா, நடிகர்கள் அனில் கபூர், அஜய் தேவ்கன் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களும் நன்கொடை அளித்தனர். குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன், இந்த விவகாரம், எம்.பி. ஒருவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல,அவர் பாராளுமன்றத்தில், இது குறித்து பேசியதால், அந்த மருந்துக்கான வரியில், 6 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
மொத்தம், 65 ஆயிரம் பேர், சிறுவனின் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தனர். ஆறு மாதங்களில் தேவையான தொகை திரட்டப்பட்டு, அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 22-ஆம் திகதி, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து சிறுவனுக்கு செலுத்தப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனின் பெற்றோர், 65 ஆயிரம் பேருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.