மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட செவிலியர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

303

லண்டன்…..

லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் என்று கூறப்படும் அந்த பெண்ணின் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது.

மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்தப் பெண்ணும் அவரது மகளும் தங்கியிருந்த நிலையில், ஷிவாங்கியின் தாயாகிய Jassumatu, தன் மகளிடமிருந்து பல நாட்களாக அழைப்பு எதுவும் வராததால் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

தன்னிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி அவர் கதவைத் திறந்து வீட்டிற்குள் செல்ல, அங்கு ஷிவாங்கியும் அவரது மகளும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களது கைகளில் குளூக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி பொருத்தப்பட்டிருந்திருக்கிறது.

அவர்களுக்கு அருகில் ஷிவாங்கி தன் தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்க, அதில், அன்புள்ள அம்மா, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துவிட்டேன், என் மகளையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன், அவளை சுயநலமாக உங்களுடன் விட்டுவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. எங்களுக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள், பதிலுக்கு நான் உங்களுக்கு மன அழுத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

அந்த மரணங்கள் குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டிருந்தார். செவிலியரான Shiwangi, என் ஹெச் எஸ் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், ஷிவாங்கி பணியில் செய்த தவறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் மீண்டும் 2020 ஜூலையில் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற ஷிவாங்கி, மீண்டும் 4.20க்கு வீடு திரும்பியுள்ளார். அந்த காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அவர் மருத்துவமனைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்ததாக கருதப்படுகிறது.

வீடு திரும்பிய ஷிவாங்கி, தான் மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்த அந்த மருந்தை தன் மகளுக்குச் செலுத்திவிட்டு, தானும் அதே மருந்தைச் செலுத்திக்கொண்டுள்ளார்.

இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், 14ஆம் திகதிதான் அவர்களுடைய உடல்கள் ஷிவாங்கியின் தாயால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, ஷிவாங்கி மருத்துவமனையிலிருந்து அலுவலர்களுக்குத் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்து, அதை ஊசி மூலம் செலுத்தி தன் மகளை சட்ட விரோதமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்ற விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஷிவாங்கி 2017ஆம் ஆண்டு மருந்து ஒன்றை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது அவர் தன்னையும் தன் மகளையும் கொல்ல பயன்படுத்திய அதே மருந்தை அப்போது திருடியதற்காகத்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.