சென்னை….
சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய முறைபடி மகேந்திரன் தாலிகட்டி தீபாவை மணந்தார். தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியம் தலைமையில் தான் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
ஆம் புதுமை தான்! கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இருவரும் சிகிச்சை பெற்று குணமாகி அங்கேயே பணி செய்த நிலையில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது.
மகேந்திரன் கூறுகையில், என்னோட சொந்த ஊர் சென்னை. நான் பி.காம் எம்பிஇ, எம்பில், பிஜிடிசிஏ முடிச்சிருக்கேன். அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமா கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இரண்டாண்டுகள் சிகிச்சை எடுத்துக்கிட்டேன்.
சிகிச்சைக்கு பின்னர் குணமாகிட்டு இங்கேயே டேகேரில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் டே கேரில் இருந்தப்ப சிகிச்சைக்காக தீபா வந்தாங்க. அவரை பார்த்ததுமே எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. ஏனெனில், தீபா ஆசிரியை. என் அம்மாவும் பிரின்சிபலாக இருந்தவங்கதான்! அதனால அப்பவே அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தது என்றார்.
தீபா பேசுகையில்,நான் எம்ஏ, பிஎட் முடிச்சிட்டு டீச்சராக ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். என் அப்பா இறந்த செய்தி கேட்டு மன அழுத்தத்துக்குள்ளே போயிட்டேன். அப்புறமா இங்க ரெண்டு வருஷம் சிகிச்சை எடுத்து குணமாகி இங்கேயே cafe r’vive-ல் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.
குணமாகி வீட்டுக்குப் போனேன். ஆனா, அங்க இருக்க முடியல. வேலை காரணமா மறுபடியும் இங்கேயே வந்துட்டேன். இவரை முதன்முறை சந்திச்சப்பவே இவர் என்கிட்ட லவ் யூன்னுலாம் சொல்லலை.
நேரடியா, `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா!’ன்னு தான் கேட்டார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சில பர்சனல் காரணங்களால் என்னால உடனே ஓகே சொல்ல முடியல. ஒரு ஆறு மாசம் கழிச்சு அவருக்கு ஓகே சொன்னேன் என கூறினார்.
நாங்களும் எல்லார் மாதிரியுமான ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். எங்களுடைய கோபத்தை விடவும் எங்கள் காதலுக்கு வீரியம் அதிகம் என நிரூபித்துக் காட்டுவோம் என தம்பதி மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.