மனிதர்கள் பூஜிப்பதற்காக கடலே வழிவிடும் அதிசய சிவதலம்!

790

கடவுளை வழிபட வழிபட நம் வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது ஐதீகம். இதில் மக்கள் வந்து இறைவனை பூஜிக்கும் வகையில் கடல் ஒன்று உள்வாங்கி வழிவிடுகிற அதிசய சிவ ஸ்தலம் ஒன்றை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

பூமியின் எல்லா இடங்களிலும் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் அதிசயத்தின் அடிப்படையில் கடலுக்கு மத்தியில் பாண்டவர்கள் வழிபட்ட சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டும் சாதாரண மக்கள் தினமும் வந்து பூஜிக்கும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கும் கடல் உள்வாங்கி வழிவிடுகிறது.

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் கௌரவர்களை வென்று தர்மத்தை நிலை நாட்டினர். இருப்பினும் இதன் மூலம் உறவினர்களை கொன்ற பாவத்திற்கும் ஆளானார்கள்.

யுத்தம் வென்ற சந்தோஷத்தை விடவும் உறவினர்களை கொன்ற பாவம் பாண்டவர் மனதை வாட்டியது. இதற்கான பரிகாரம் தேடி பகவான் கிருஷ்ணரை சரணடைந்தனர் .கிருஷ்ணர் ஒரு கருப்பு நிற கொடியையும் கருப்பு நிற பசுவையும் பாண்டவர்களிடம் தந்து அதன் பின்னால் போக சொன்னார்.

எந்த இடத்தில இந்த கருப்பு கொடியும் கருப்பு பசுவும் நிறம் மாறி வெண்மையாக காட்சியளிக்கிறதோ அந்த இடமே அவர்கள் பாவம் போக்கும் தலமாகும் என்று கூறினார்.

பல வருடங்களாக கருப்பு பசு மற்றும் கருப்பு கொடியின் பின்னால் பாண்டவர்கள் நடந்தனர். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கருப்பு பசுவும் கொடியும் நிறம் மாறி வெண்மையாகியது.

அதுவே தங்கள் பாவங்கள் போக்கும் தலம் என்பதை உணர்ந்த பாண்டவர்கள் அங்கேயே தவம் இயற்ற ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பாண்டவர்கள் செய்த உக்கிரமான தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் ஐவருக்கும் தனி தனியே காட்சி அளித்தார்.

அவ்வாறு தங்கள் களங்கங்களை போக்க இறைவன் சிவனே நேரில் வந்ததால் பாண்டவர்கள் அந்த இடத்தில நிஷ்களங் மஹாதேவ் (பாவங்களை போக்கும் மஹாதேவர்) என்ற ஒரு கோயிலை உண்டு பண்ணினார்கள்.

குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள கோலியாக் எனும் இடத்தில் கடலுக்குள் ஒன்றரை கிமீ தூரத்தில் பாண்டவர்கள் அமைத்த இந்த கோயில் அமைந்துள்ளது.

வெள்ளம், புயல், சுனாமி , பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக தற்போது இந்த கோயிலில் ஐந்து சிவலிங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் அவை வெளிவிடும் சக்தி அளப்பறியாதது என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.

காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஆழமான கடல் பகுதியாக காணப்படும் இந்த கோயில் மிகவும் சீற்றத்தோடு பொங்கி வருமாம். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதியம் மூன்று மணிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கிறது. அங்குள்ள சிவலிங்கங்கள் வெளியே தெரிகின்றன.

அந்த நேரத்தில் எது குறித்தும் அச்சப்படாமல் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கடலுக்குள் செல்கின்றனர்.சில மணி நேரம் மட்டுமே தரிசனம் தரும் சிவனை மக்கள் பால் தயிர் பூக்கள் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழி படுகின்றனர்.

கோயிலை ஒட்டி பாண்டவர்கள் வெட்டிய தீர்த்தமும் அமைந்திருக்கின்றதால் அந்த தீர்த்தத்தில் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு அதன்பின்தான் மேற்கண்ட பூஜைகளை ஆரம்பிக்கின்றனர்.

இங்கு வந்து கடலில் குளித்து சிவனை பூஜித்தால் எல்லாவிதமான பாவங்களும் அகன்று விடும் என்றொரு நம்பிக்கை இங்கு நிலவுகின்றது.

அமாவாசை பௌர்ணமி நாட்களில் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் நிஷ்களங் மஹாதேவரை சந்திக்க மக்கள் வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

கடல் உள்வாங்கும் வரை பக்தியோடு காத்திருக்கும் மக்கள் அதன் பின் பக்தியோடும் நம்பிக்கையோடும் கடலுக்குள் நடந்து செல்கின்றனர்.

இவை அத்தனையையும் பார்க்கும்போது மனிதனின் மீதான இறைவனின் கருணையால்தான் கடல் வந்து வழி விட்டு இறைவனை பூஜிக்க செய்யும் அற்புதம் நடைபெறுகிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

அவன் அருள் இல்லாமல் அவன் தாள் வணங்க முடியாது என்பதுதான் நிதர்சனம் என்று இந்த குஜராத் கோலியாக்கில் அமைதியாக நிரூபித்து கொண்டிருக்கிறார் நிஷ்கலங் மஹாதேவர்.