மனைவிகளிடம் அனுதாபத்தை பெற கணவர் போட்ட பலே திட்டம் : போலீசாரிடம் சிக்கிய கணவன்!! நடந்தது என்ன?

955

மகாராஷ்டிரா….

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கெய்க்வாட். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி குடும்பம் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது இரண்டாவது மனைவி சுனிதா என்பவர், கடந்த அக்டோபர் 14-ம் தேதி தனது கணவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, சம்பவம் நடந்த நாளன்று இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ ரிக்ஷாவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சந்தீப்பை அடித்து கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியை ஆராய்ந்தனர். அதனடிப்படையில் அந்த ஆட்டோ ரிக்ஷாவை கண்டறிந்து விசாரித்தனர். பின்னர் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தனது வாகனத்தை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சந்தீப்பை கடத்தி சென்ற மூவரும் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் என்று கண்டறியப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, நாங்கள் சந்தீப்பை அடித்து, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும், பின்னர் அவர், அங்கிருந்து வேறு ஒருவரின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஸ்கூட்டி யாருடையது என்பதை கண்டறிந்து கடந்த 18-ம் தேதி ஜாவேத் என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் இது ஒரு போலி கடத்தல் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தன்னை கடத்தியதாக தனது மாமியார் மீது பழிபோட சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சந்தீப் இருக்கும் இடத்தை அறிந்து அங்கே சென்று அவரை கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.

அப்போது அவரிடம் விசாரித்ததில், தன்னை கடத்தியதாக கூறினால், தனது இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் வரும் என்றும், என்னை இருவருமே சரிவர பார்த்துக்கொள்ளவில்லை என்பதால் இப்படி செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.