மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர், மணமகன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு தனியார் திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை காதரின் வீட்டு வாசலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது மர்மநபர் ஒருவர் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், மணப்பெண்ணின் அக்காள் கணவர் மொகைதீன் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வது தெரியவந்தது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் அக்காள் மற்றும் அவரது கணவருக்கு உடன்பாடில்லை என்றும் தெரியவந்துள்ளது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மொகைதீன் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.இதனிடையில் நாளை திட்டமிட்டபடி திருமணம் நடைபெறும் என இருவீட்டாரும் தெரிவித்துள்ளனர்.