சிலையாக வடித்த சகோதரி………
பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அதிக பிரியம் இருக்கும். குறிப்பாக பிறந்த வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு செல்லும் போது எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், தனது தாய், தந்தை இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். திருமணத்தின் போது அவர்கள் மனம் தேடுவது அதுவாக தான் இருக்கும். தஞ்சாவூரை சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் இதேபோல் ஒரு ஆசை இருந்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்காக உயிரிழந்த தந்தையை சிலையாக தத்ரூபமாக வடிவமைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளனர் மணமகளின் சகோதரிகள். கடந்த வாரம் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது பலரது மனதிலும் இனிமையான நிகழ்வாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். முதல் 2 மகள்களின் திருமணமும் தந்தை செல்வம் தலைமையில் உற்சாகமாவும், மகிழ்ச்சியாகவும் நடந்துள்ளது. சில நாட்கள் சென்ற பிறகு கடந்த 2012ம் ஆண்டு செல்வம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் உயிரிழந்து 8 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அவரது மூன்றாவது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால் செல்ல மகளுக்கு அவரது தந்தை இல்லையே என்ற கவலை அதிகமாக இருந்துள்ளது. ஆடை, நகை என விதவிதமாக ஏற்பாடுகள் செய்தாலும் மகளின் மனம் தந்தையை மட்டுமே தேடியது.
அவரது வருத்தத்தை போக்க நினைத்த சகோதரிகள் 6 லட்சம் ரூபாய் செலவில் தந்தையை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். சிலிக்கானை வைத்து இந்த சிலையை தயார் செய்துள்ளனர். திருமணத்தன்று தனது தந்தையின் சிலையை கண்ட மணமகள் லட்சுமி பிரபா ஆச்சரியத்தில் என்ன செய்வதென அறியாமல் திகைத்து நின்றுள்ளார். அவரது சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றி, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்களும் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் காண்போர், கேட்போர் அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. விபத்தில் உயிரிழந்த தனது மனைவியை சிலையாக வடித்து, அந்த சிலையுடன் சேர்ந்து கணவர் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.