திருவள்ளூர்…..
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் மண்ணை தோண்டி பார்த்த போது அதிர்ச்சி காணப்பட்டது.
அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் யார்..? எதற்காக அவரை கொலை செய்தனர்..? முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் கொன்று மண்ணில் புதைத்திருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.
மேலும், கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில்,
கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் கல்லூரி மாணவன் பிரேம்குமார் என்பதும், இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்கள் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம்குமாரை அடிஆட்களை ஏவி கொலை செய்து மண்ணில் புதைத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான முழு விவரங்களும் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் இரண்டு மாணவிகள் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.