கன்னியாகுமரி……
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.
இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். மேலும், நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை மாணவி காதிலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி காலை மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மகளை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மூன்று நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து 4ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.