மாமியார் மற்றும் மனைவிக்கு ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!

253

கர்நாடகா….

சமீப காலங்களில் குடும்ப வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் போதும் ஆங்காங்கே துயரங்கள் நிகழத்தான் செய்கிறது. அந்த வகையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் ஓருவர் செய்த காரியம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது வயது 48. பேக்கரி உரிமையாளரான ரவி குமாருக்கும் கோவிந்தராஜ் நகர் அருகே எஸ்.ஆர்.காலனியில் வசித்து வந்த சுனிதா என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோவிந்தராஜ் நகர் அருகே மூடலபாளையா சஞ்சீவினி நகர் பகுதியில் ரவி குமார் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ரவி குமாருக்கு சமீப காலமாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சுனிதாவின் தாய் சரோஜம்மா தனது மகளை பார்க்க வந்து இருக்கிறார். அதே நேரத்தில் சுனிதாவுடன் ரவிக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சுனிதாவின் நடத்தை குறித்து ரவிக்குமார் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

சுனிதா – ரவி குமார் இடையே ஏற்பட்ட சண்டை அதிகரிக்கவே, கோபத்தில் இருந்த ரவி குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுனிதாவை கண்மூடித்தனமாக வெட்டியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மகளின் நிலைமையை பார்த்த சுனிதாவின் தாயார் சரோஜாம்மா ரவி குமாரை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது, சரோஜாம்மாவையும் ரவி குமார் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் சுனிதா மற்றும் அவரது தாய் சரோஜாம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்கள். இதனை அடுத்து, ரவி குமார் காவல்துறையில் சரணடைய முடிவு எடுத்திருக்கிறார்.

கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்த ரவி குமார் அதிகாரிகளிடம் விஷயத்தை சொல்ல, அனைவரும் ஷாக்காகி இருக்கிறார்கள். இதனை அடுத்து ரவி குமாரை கைது செய்த காவல்துறை அவரது வீட்டிற்கு விரைந்து சென்று சுனிதா, சரோஜம்மாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் நிகழ்த்திய இரட்டைக் கொலை அந்தப் பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.