தருமபுரி….
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி அருகே சொத்துக்காக முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி கைது.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் (75). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதம் (70) இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவி ராணி (45). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை இரண்டாவது மனைவி ராணி ரஞ்சிதத்திடம் தான் அந்த நிலத்திற்கு 5 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் அதை பெற்றுக்கொண்டு தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். அதற்கு ரஞ்சிதம் மறுத்து வந்த நிலையில் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இரண்டாவது மனைவி ராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து வீட்டுக்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சிதம் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிவதை கண்ட ராணியின் மகன் மோகன் ஓடி வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரஞ்சிதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 70 வயதான ரஞ்சிதம் 80 சதவீதம் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இரண்டாவது மனைவி ராணியை கைது செய்தனர். சொத்துக்காக முதல் மனைவியை இரண்டாவது மனைவி மண்ணெண்னை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.