மூதாட்டி………
கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை போலீசார் உயிருடன் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்தவர் சுப்பம்மா (வயது 70). இன்று அதிகாலை தன்னுடைய வயலுக்கு சென்ற அவர் கால் தவறி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
கிணற்றில் விழுந்த சுப்பம்மா தண்ணீர் இறைப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு உதவி கேட்டு சப்தம் போட்டு கொண்டிருந்தார்.
மதியம் 3 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் சுப்பம்மாவின் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது சுப்பம்மா கிணற்றில் விழுந்து உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதை பார்த்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற போலீசார் கட்டில் ஒன்றை கயிறு மூலம் கட்டி கிணற்றுக்குள் இறக்கி அதன் மூலம் மூதாட்டியை மீட்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பாட்டிக்கு ஆயுசு கெட்டி என நெட்டிசன்கள் விமர்சித்தும் வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.