வைசாலி….
இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி. இவர் இந்தியில் நடித்த சின்னத்திரை தொடர் தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மத்திய பிரதேசத்தில் வசித்து வந்த வைசாலி கடந்த 16 ஆம் தேதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வைஷாலியின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய 5 பக்க கடிதத்தை கைப்பற்றினர்.
அக்கடிதத்தில் தனது முன்னாள் காதலர் ராகுல் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்து, என் வாழ்க்கையைச் சிதைத்த ராகுல் மீது நடவடிக்கை எடுத்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும் என்றும் கடிதத்தில் வைஷாலி கூறியிருந்தார். கடிதத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ராகுலின் தந்தையும், வைஷாலியின் தந்தையும் இணைந்து வியாபாரம் செய்து வந்ததால் இரு குடும்பங்களும் நல்ல உறவுடன் பழகி வந்துள்ளனர். இருவரின் வீடும் தனித்தனியே அருகில் இருந்துள்ள நிலையில் ராகுல் மற்றும் வைஷாலியும் காதலித்தும் வந்துள்ளனர். பின்னர் சில காரணங்களால் ராகுல் வைஷாலியை விட்டு விலகி, திஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பின்னரும் பாலியல் ரீதியாக வைஷாலிக்கு பல தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார்.
ராகுல் வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், வைஷாலிக்கும் திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர். வைஷாலிக்கு பார்க்கும் மாப்பிள்ளைகளின் செல்போன் எண்களை வாங்கி அவர்களிடம், தனக்கும் வைஷாலிக்கும் இருந்த தொடர்பு பற்றி கூறி பல வரன்களை தடுத்திருக்கிறார் ராகுல். இதற்கெல்லாம் மேலாக, காதலித்தபோது வைஷாலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களையும் அவர்களுக்கு காண்பித்து திருமணத்தை தடுத்திருக்கிறார் ராகுல்.
கடந்த ஆண்டு கென்யாவை சேர்ந்த ஒருவருடன் வைஷாலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடக்கவிருந்த இந்த திருமணமும் ராகுலால்தான் மாப்பிள்ளை வீட்டாரால் ரத்து செய்யப்பட்டது என்று வைஷாலியின் பெற்றோர் போலீசில் தெரிவித்துள்ளனர்.
காதலித்த போது எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதால் நடிகை உயிரை மாய்த்துகொள்ள காரணம் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து ராகுல் மற்றும் அவரது மனைவி திஷா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகுலை புதன் கிழமை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது மனைவி திஷாவை தேடி வருகின்றனர்.