மென்பொறியாளருக்கு கொரோனா: 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி!!

481

சத்யாபாய்…

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 40 வயதான மென்பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யாபாய் இவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்தார்.

ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள தாமான் தெனகாசாலாக் செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 18 வது மாடியில் குடியிருந்து வந்தனர்.

கணவன் மனைவி இருவரும் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 14 ந்தேதி ரவிராஜா, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மனைவி சத்யாபாய்க்கும், மகளுக்கும் கடந்த 16ந்தேதி கொரோனா உறுதியானது. கடந்த 17 ந்தேதி கடுமையான மூச்சுத்திணறலுடன் அவதிப்பட்டு வந்த சத்யா பாய், உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை கவனித்துக் கொள்ளவோ தங்களுக்கு உதவவோ, ஆளில்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கணவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில், கடுமையான மன உளைச்சளுக்குள்ளான சத்யாபாய், தனது 5 வயது மகளுடன் தான் வசித்து வந்த 18 வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் . இதில் சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்டு உறவினர்கள் கதறிய நிலையில் , ரவிராஜாவும் சிகிச்சை பலன்றி சனிக்கிழமை மாலையில் உயிரிழந்ததால் கொரோனாவின் கோர முகத்திற்கு தமிழ் குடும்பமே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. ரவிராஜா உயிரிழந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்

தங்கள் வீட்டு பிள்ளைகளின் உயிரிழப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள உறவினர்கள் , தங்கள் மகன் மருமகள் மற்றும் பேத்திக்கு இறுதி சடங்குகள் செய்ய அஸ்தியையாவது தமிழகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மென்பொறியாளரின் குடும்பத்திற்கு உரிய சிகிச்சைக்கான உதவியோ அல்லது தேவையான மன நல ஆலோசனையோ வழங்கப்பட்டிருந்தால் இந்த விபரீத உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது என்பதே உறவினர்களின் ஆதங்கமாக உள்ளது.