ஈரோடு….
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது. இந்த நிலையில் , பாசூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மேலெழுந்து வந்தது.
இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் பயந்துபோய் அலறியடித்து ஓடினர். அடித்து வரப்பட்ட சடலம் துர்நாற்றம் வீசியதால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில், பாசூர் அருகே செங்கோடையம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) என்பவரது சடலம் தான் அது என தெரிய வந்தது.
அவரது உறவினர்கள் முறைப்படி உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, துரைசாமியின் சடலம் மேலே வந்துவிட்டது.
மேலும் அடித்து செல்லப்பட்ட சடலம் முட்புதரில் சிக்கியுள்ளது. தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. தற்போது தண்ணீர் வடிந்ததும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து துரைசாமியின் மகன் உதயகுமாரிடம் பொலிஸார் அவரது தந்தையின் சடலத்தை ஒப்படைத்தனர். இரண்டாவது முறையாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.