லண்டன் நண்பியை சந்திக்க வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் மரணம்!!

752

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டக்களப்பில் உள்ள லண்டன் நண்பியை சந்திக்க வந்தபோது உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் திருடர்களினால் செய்யப்பட்ட கொலை என ஊடகங்களின் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பிலான உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது பின்வரும் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது. அதனை தொகுத்து இங்கு தருகின்றோம்.

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடந்த கொள்ளைச் சம்பவ முயற்சியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.எம்.சி. ஹேரத் என்பவர் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.எம்.சி. ஹேரத் என்பவர் குருநாகல், அளவ்வை பகுதியை சேர்ந்தவர்.

இவர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த தனது நீண்ட கால நண்பியான தமிழ் பெண் ஒருவரை சந்திப்பதற்கு மட்டக்களப்பிற்கு காரில் வந்துள்ளார்.

கடந்த 24 திகதி இரவு மயிலம்பாவெளி, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒருவரை சந்திப்பதற்கு குறித்த தனது நண்பியுடன் காரில் சென்று திரும்பிய போது காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

வேகமாக சென்ற கார் அந்த வீதியின் சந்தியில் நின்ற இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் உரசுவது போன்று சென்றுள்ளது.

இதனால் இளைஞர்கள் இவ்வளவு வேகமாக போகிறானே யாரும் அடிபட்டால் என்ன நிலை என ஏசியபடி நின்றுள்ளனர்.

அந்த நேரம் பார்த்து அந்த வீதியால் ஸ்ரீ காமாட்சி அம்மன் வெளி வீதியுலா வருகை தந்ததினால் காரை ஓட்டிச் சென்றவர், இளைஞர்கள் நின்ற சற்று தூரத்தில் காரை நிறுத்தியுள்ளார்.

கார் நின்றதைக் கண்ட இளைஞர்கள் அந்த இடத்திற்குச் சென்று காரை ஓட்டிச் சென்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்க, அவர் எனக்கு தமிழ் தெரியாது எனக் கூற காரில் இருந்த அவரது மட்டக்களப்பைச் சேர்ந்த லண்டன் நண்பி உடனடியாக இறங்கி ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

இதனால் கொஞ்சம் மதுபோதையில் இருந்த அவ்வூர் இளைஞர்கள் கடுப்பாகி வாய்த் தகராறு செய்ய இன்ஸ்பெக்டரின் நண்பி இளைஞர்களுக்கு காலில் உள்ள செருப்பை கழற்றி அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தனது கையில் இருந்த தலைக்கவசத்தினால் குறித்த பெண்ணை தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க முற்பட்ட இன்ஸ்பெக்டரின் முகத்தில் இளைஞர் ஒருவர் அடித்துள்ளார்.

முகத்தில் அடிபட்ட இன்ஸ்பெக்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் செய்த போது மருந்து ஒவ்வாமையால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவர் ஏற்கனவே வேறு ஒரு நோய்க்கு மருந்து உட்கொண்டிருந்ததால் அவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டு அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 52 வயதான குருநாகல், அளவ்வை பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் கடமை புரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.எம்.சி. ஹேரத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மயிலம்பாவெளி பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த இன்ஸ்பெக்டர் எதற்காக மட்டக்களப்பிற்கு வந்தார்? அவரது லண்டன் நண்பி மட்டக்களப்பிற்கு எப்போது வந்தார்? இவர்களுக்கு இடையிலான நட்பு பாடசாலை நட்பா? போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.