லிபியா துயரம்! கண்கலங்க வைத்த 3 குழந்தைகளின் ஒளிப்படங்கள்!

647

ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 100- க்கும் மேற்பட்டோர் லிபியக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போரின் காரணமாக லிபியா மற்றும் அதைச் சுற்றி உள்ள நகரங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பா நோக்கிப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அதன்படி நேற்று வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு இறப்பர் படகில் ஐரோப்பா நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் லிபியக் கடல் பகுதியில் பயணிக்கும் போது படகின் என்ஜின் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் லிபியக் கடல் பகுதியிலிருந்து 5 வயதுக்கும் குறைவாக உள்ள மூன்று குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் குழந்தைகளின் ஒளிப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 350- க்கும் மேற்பட்டவர்களை லிபியக் கடற்படையினர் மீட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லிபியாவின் பன்னாடடு அகதிகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிரிஸ்டியன் பீட்டர் கூறுகையில், “மூன்று குழந்தைகளின் உடல்கள் மட்டும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர். அதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

லிபியக் கடல் பகுதி முழுவதும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன”எனக் கூறியுள்ளார்.