வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்த பெண் : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

206

சென்னை….

எச்டிஎப்சி வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், மயிலாப்பூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஐபோன் 10 Max செல்போனை ரூபாய் 1,08,160க்கு Consumer Durable Loan மூலம், போலியான ஆவணங்கள் தயார் செய்து நாகப்பிரீத்தி என்பவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வாங்கி, வங்கியை ஏமாற்றிய நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வங்கி மோசடி புலனாய்வு பிரிவைச் சேர்ந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த ராதிகா என்பவரை நேற்று ஈரோட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் புலன் விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த ராதிகா தனது உறவினரான நாகப்ரீத்தி என்பவரின் பான்கார்டினை உபயோகப்படுத்தி போலியான வாகன ஓட்டுனர் உரிமம், கார்த்திகேயன் பெயரில் வங்கி கணக்குகள் தயார் செய்து எச்டிஎப்சி வங்கியில் சமர்பித்து ரூபாய் 1,08,160 மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் 10 Max என்ற செல்போனை வாங்கி, வங்கிக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ராதிகாவும் அவரது கணவர் கார்த்திக் என்பவரும் 2015, 2016ம் ஆண்டுகளில் லோன் பெற்று தருகிறேன் பாலிசி எடுங்கள் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியிருப்பதும், இதே போல் கார் லோன் வாங்கி மோசடி செய்திருப்பதும், சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஷோரூம்களில் Consumer Durable Loan மூலமாக பல்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து பொருட்களை வாங்கி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

பிளிப்காட்டில் பொருட்கள் வாங்கி அதில் உள்ள பொருட்களை மாற்றி ஏமாற்றியிருப்பது தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, மதுரை போன்று பல இடங்களில் இவர்கள் மீது வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ராதிகா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் கடந்த 4 மாதங்களில் மட்டும் போலியான ஆவணங்களை கொடுத்து Consumer Durable Loan பெற்று ஏமாற்றிய நான்கு நபர்களை வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே Consumer Durable Loan வாங்குபவர்கள் உண்மையான தகவலை தெரிவித்தும், உண்மையான ஆவணங்களை சமர்பித்து லோன் பெறுமாறும், போலியான ஆவணங்கள் சமர்பித்து லோன் பெற்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.