பிரசவ வலியால்..
தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர்.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர், இப்பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்பெண்ணை தூக்கிக்கொண்டு கணவர் வரும் போதே வலி அதிகரித்துள்ளது, எனவே அங்கிருக்கும் அலுவலகம் முன்பு மனைவியை அமரவைத்து விட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்படியே ஆட்டோ ஓட்டுநரும், எழுத்தாளருமான சந்திரன் என்பவருக்கும் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சந்திரன், பெண்ணை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல முற்படுகையில் குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது.
உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்துள்ளார், அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை அறுத்து, தாய்- சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை படத்திற்கு கருவான லாக் அப் என்ற புத்தகத்தை எழுதியவர் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.