தமிழகத்தில்….
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு “ஆபரேசன் கஞ்சா வேட்டை 20” நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் நேற்று திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பேக்குகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பேக்குகள் அருகே இருந்த திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சிவசங்கர் (25) அவரது மனைவி சத்யா ( 20), சரபேஸ்வரர் (19) ஆகியோரை போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பின்னர் அவர்களை மயிலாடுதுறை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்தபோது 23 பாக்கெட்டுகளில் 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பு என்று ரயில்வே போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் சரபேஸ்வரர், சத்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் .
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்தவர்களை தஞ்சாவூர் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.