விமானத்தில் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!

835

விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்யும் போது ஒரு வித இனம்புரியாத மனபயம் எல்லோருக்கும் இருப்பது இயல்பான ஒன்று.

என்ன நடக்குமோ? நாம் பாதுகாப்பாக சென்றுவிடுவோமா என்பது குறித்த சிந்தனையில் நாம் மேலோங்கியிருக்கும்போது, இதுபோன்ற பயம் ஏற்படும்.

ஆனால், உங்கள் பயணம் குறித்து மிகத்தெளிவாக நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அந்த பயத்தில் இருந்து விடுபடலாம்.

பயணத்திற்கு முந்தைய நாளே உங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிகொள்ளுங்கள். பேக் மற்றும் சூட்கேஸ்களில் துணிகள் மற்றும் அனைத்து பொருட்களையும் முந்தைய நாள் இரவே, பத்திரமாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

சூட்கேஸ்களில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை எழுதி ஒட்டிவிடுங்கள். ஏனெனில் உங்கள் சூட்கேஸ் தொலைந்துவிட்டால், இதன் மூலம் எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். எதனையும் கடைசி நேரத்தில் செய்யாதீர்கள், அதுவே உங்களுக்கு பதட்டத்தை அதிகரிக்க காரணமாகிவிடும்.

குறிப்பாக, நீங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனம் கொடுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றுங்கள். எவ்வளவு பொதிகளை நீங்கள் கொண்டுசெல்ல வேண்டும், எத்தனை மணிநேரத்திற்கு முன்பாக நீங்கள் விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்பது மிக முக்கியம்.

3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது அதிகமான விமான நிறுவனங்களின் விதிமுறைகளில் ஒன்றாக இருக்கும்.

உங்கள் போர்டிங் பாஸை சரிபார்க்கவும், போர்டிங் பாஸை சேகரிக்கவும், பொதிகளை சரிபார்க்கவேண்டும். பின்னர், பாதுகாப்பு ஸ்க்ரீனிங் சோதனைச்சாலை வழியாக சென்று புறப்படும் நுழைவாயிலில் அமர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் விமானம் புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட அரை மணி நேரத்திற்கு முன்னர் நீங்கள் விமானத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

போர்டிங் பாஸ் வாங்கியவுடன், எந்த நுழைவாயிலின் வழியாக உங்கள் விமானத்திற்கு செல்லவேண்டும் மற்றும் விமான புறப்படும் நேரம் ஆகியவை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு ஸ்கீரினில் இருக்கும்.

அப்படி, உங்கள் விமான நேரத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தால், உங்கள் தொலைபேசி எண்ணிற்கு விமான நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதனை தெரிந்துகொள்ளலாம் மற்றும் விமான நிலையத்தின் ஸ்கீரினிலும் இது டிஸ்பிளே ஆகும்.

உங்களுடன் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீல் சேரில் அவர்கள் பயணம் செய்ய நேரிட்டால், விமான நிறுவனத்தின் உதவியோடு நீங்கள் முன்கூட்டியே விமானத்திற்குள் சென்றுவிட ஏற்பாடு செய்துகொடுக்கப்படும்.

விமானத்தில் ஏறிய பின்னர், கைகளில் வைத்திருக்கும் பொதிகளை விமானத்தின் மேல்வாட்டில் வைத்துவிட்டு, சீட் பெல்ட்டை போட்டு அமர்ந்துகொள்ளுங்கள். அப்படி பெல்ட்டை அணிய தெரியவில்லையென்றால் விமான பணிப்பெண், அனைவர் முன்னிலையிலும் நின்று எவ்வாறு பெல்ட் அணிவது என்பது குறித்த தெரிவிப்பார்.

விமானத்தில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் உடனடியாக விமான பணிப்பெண்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கைப்பேசியை Switch Off செய்ய தேவையில்லை. மாறாக flight mod ON செய்தால் போதுமானது.