ஆந்திர….
ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்குட்பட்ட வித்யாநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்யலட்சுமி (வயது 41). தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகவும் ராஜ்யலட்சுமி பணிபுரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ராஜ்யலட்சுமியின் உறவினரான துர்காபிரசாத், எதேச்சையாக ராஜ்யலட்சுமிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, போனை எடுத்த ராஜ்யலட்சுமியின் 10 வயது மகன், தனது தாய் கடந்த 4 நாட்களாக தூங்கிக் கொண்டே இருக்கிறார் என்றும், அவர் மீது நாற்றம் வீசுவதாகவும், நீங்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கேட்டு குழப்பமும் சந்தேகமும் அடைந்த துர்காபிரசாத், உடனடியாக ராஜ்யலட்சுமியின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளார். அங்கே ராஜ்யலட்சுமி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த துர்காபிரசாத், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ராஜ்யலட்சுமியின் உடலும் அழுகி கிடந்ததாக கூறப்படுகிறது.
அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகளில், ராஜ்யலட்சுமியின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவரது மரணம் இயற்கையான ஒன்று என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, ராஜ்யலட்சுமியின் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனது தாய் உயிரிழந்தது கூட தெரியாமல், 4 நாட்களாக அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என மகன் நினைத்து கொண்டிருந்தது தான் பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது. சில தினங்களுக்கு முன் வாந்தி எடுத்த ராஜ்யலட்சுமி, மகனிடம் சற்று தூங்க போகிறேன் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகிறது. ஆனால், அவர் உயிரிழந்தது கூட தெரியாத மகன், தாய் கூறியது போலவே தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து விட்டார்.
அது மட்டுமில்லாமல், தாய் இறந்து போனது தெரியாமல், ராஜ்யலட்சுமியின் மகன் பள்ளிக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. துர்காபிரசாத் அளித்துள்ள தகவலின் படி, ராஜ்யலட்சுமியின் மகனுக்கு சிறிய அளவில், மனநல குறைபாடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மற்றவர்களிடம் அதிகமாக பழகாமலும் இருந்து வந்துள்ளார்.
மனநல குறைபாடு இருந்த போதும், நான்கு நாட்களாக யார் உதவியும் இல்லாமல், பள்ளிக்கு சிறுவன் எப்படி சென்றான் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ராஜ்யலட்சுமி இறந்து நான்கு நாட்களானதும், மேலும் இயற்கையான மரணம் தான் என்பதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாயின் பிரிவு கூட தெரியாமல், வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்த மகனின் மனநிலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.