கேரள….
கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த நல்லன்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2014ம் ஆண்டு மகனின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார். பிறகு இவரால் சரியாகப் பணம் கட்ட முடியவில்லை. இதனால் பலமுறை வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
மேலும் வாங்கிய கடனுக்காக வட்டியும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் விஜயன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
இதில், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரூ. 10 லட்சத்தைக் கட்டவில்லை என்றால் உங்கள் வீடு ஜப்தி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.