10 ஆண்டுகள் வீட்டு அறையில் காதலியை ரகசியமாக வைத்திருந்த இளைஞர் : திடுக்கிடும் தகவல்!!

577

இந்தியா…

இந்திய மாநிலம் கேரளாவில், பத்து வருடங்கள் இரகசியமாக ஒன்றாக வாழ்ந்த ஒரு காதல் ஜோடி இறுதியாக திருமணம் செய்து கொண்டது.

யாருக்கும் தெரியாமல் தனது காதலி சஜிதாவை தனது வீட்டில், ஒரே அறையில் 10 வருடங்களுக்கு மேலாக மறைத்து வைத்திருந்ததற்காக சமீபத்தில் தலைப்பு செய்தியாக வந்தவர் ரஹ்மான்.

இறுதியாக சென்ற புதன்கிழமை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள நென்மாராவில் தனது காதலியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். உள்ளூர் துணை பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சரி அவர்கள் மாட்டிக்கொண்டது எப்படி?

ரஹ்மான் மார்ச் 10-ஆம் திகதி தனது வீட்டை விட்டு எங்கேயோ சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஜூன் 7, 2021 அன்று, ரஹ்மானின் சகோதரனான டிரக் டிரைவர் பஷீர் பாலக்காட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நென்மாரா நகரில், தனது சகோதரர் ரஹ்மான் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்டார்.

பஷீர் அவரைப் பின்தொடர்ந்தார். பல நாட்கள் கழித்து அவரை பார்க்க செல்வதால் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க முடிவு செய்தார் பஷீர்.

வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்துவந்த ரஹ்மானை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். பின்னர் பொலிஸார் ரஹ்மானுடன் அவர் விதானசேரி என்ற இடத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்றனர்.

அங்கு அதிகாரிகள் சோதனை செய்ததில், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தனர். ரஹ்மான் அவர் தனது மனைவி என்று கூறினார்.

அப்பெண்ணிடம் விசாரித்ததில், அவர் 11 வருடங்களாக அதே காவல் நிலைய எல்லைக்குள் காணாமல் போயிருந்த சஜிதா என்பதை அவர்கள் அறிந்து அதிர்ந்துபோனார்கள்.

பின்னர் விசாரணையில், சஜிதா கடந்த 10 ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் ரஹ்மானின் வீட்டில் ஒரு அறையில் ரகசியமாக வாழ்ந்துவந்துள்ளார், இந்த விடயம் ரஹ்மானுடன் அதே வீட்டில் இருந்த அவரது பெற்றோருக்கே தெரியாது என்று தெரியவந்தது. இவர்களை பற்றிய செய்தி இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

10 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

பிப்ரவரி 2010 இல், சஜிதா தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரது வீட்டிற்குச் சென்று திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர், ஆனால் பொலிஸாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

குடும்பம், இறுதியில் அவளைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை கைவிட்டது. அந்த கிராமமும் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. அவர் யாரோ ஒருவருடன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டார் என்று பலர் நினைத்தார்கள் என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார்.

அனால், சஜிதா 100 மீட்டர் தொலைவில் இருந்த காதலன் ரஹ்மானின் வீட்டிற்கு சென்றுள்ளார். ரகுமானின் தாய் தந்தைக்கே தெரியாமல் ஒரே வீட்டில், குறிப்பாக ஒரே அறையில் தங்கி இருந்துள்ளார்.

அந்த அறையில் கழிப்பறை கூட கிடையாது. இரவில் ஜன்னல் வழியாக யாருக்கு தெரியாமல் வெளியேறி சென்று தனது தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, ரஹ்மான் தனது அறைக்கு என்று பிரத்தியேகமாக ஒரு பூட்டை தயார் செய்து பயன்படுத்தியுள்ளார்.

எப்படியோ, எல்லாம் வெட்டவெளிச்சமாகி, இறுதியாக சென்ற புதன்கிழமை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள நென்மாராவில் தனது காதலியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.