100 சவரன் நகை 5 கிலோ வெள்ளி மாப்பிள்ளைக்கு போதாதாம்: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் !!

285

கடலூர்…

பண்ருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை 100 சவரன் நகைகளுக்காக திருமணம் செய்து கொண்டு, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி கெஜலெட்சுமி இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பிறவியிலேயே கெஜலட்சுமி காது கேளாத மற்றும் சரியாக வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகின்றது.

மாற்றுத்திறனாளி என்பதால் கெஜலட்சுமியை திருமணம் செய்வதற்காக 100 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி, மாப்பிள்ளைக்கு துணிவாங்க ஒரு லட்சம் ரூபாய், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 3 லட்சம் ரூபாய் , திருமணத்துக்கு பின்னர் கார் வாங்கி கொடுக்க 5 லட்சம் ரூபாய் என பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் எக்கசக்கமாக வரதட்சணையாகக் கேட்டுள்ளனர். இந்த வரதட்சணைக்கு ஒப்புக் கொண்டதால் பேசியபடி திருமணம் நடந்துள்ளது.

அனைத்து வரதட்சணைகளும் கொடுக்கப்பட்ட நிலையில் கார் வாங்கிக் கொடுப்பதாகக் கூறிய 5 லட்சம் ரூபாயை மட்டும் பெண் வீட்டாரால் கொடுக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து பெண் வீட்டார் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி மாற்றுத்திறனாளியான கெஜலட்சுமியை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பின்னரும் வரதட்சணை பணம் கேட்டு தொல்லைக்கொடுப்பது தொடர்ந்துள்ளது.

வரதட்சணை பணம் வாங்கிவராததால் அறையில் பூட்டி சாப்பாடு வழங்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகின்றது. சீனிவாசனின் தாய் மற்றும் சகோதரிகளின் தூண்டுதலில் பேரில் நீண்ட நாட்களாக இந்த கொடுமை நடந்து வந்துள்ளது.

வரதட்சணைக்கு பதிலாக குடும்பத்தில் உள்ள சொத்துக்களை மொத்தமாக எழுதி வாங்கிவரச்சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர். வாய் பேச இயலாததால் தனக்கு நடக்கின்ற கொடுமைகளை வெளியே சொல்ல இயலாமல் கெஜலட்சுமி உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் கொடுமையின் உச்சகட்டமாக அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்திய சீனிவசன் குடும்பத்தினர் , சீனிவாசனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் சைகையால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கெஜலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வரதட்சணைக்காக 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து செய்த கொடுமைகள் தொடர்பாக ஜாமீனில் வெளியே வர இயலாத 8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வரதட்சணைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் கொடுமை செய்த 6 பேரைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு காலத்தில் பெண் வீட்டார் விருப்பப்பட்டு கொடுத்ததை பேரமாக மாற்றி கேட்டு பெற தொடங்கிய பின்னர், திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாப்பிள்ளை வீட்டார் நடத்தும் பொம்மலாட்டம் என்பதே கசப்பான உண்மை..!