மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ் மிகவும் ஏழையான இவர் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவில்லை. விவசாய கூலி வேலை செய்து வளர்ந்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு 6 குழந்தைகளை பெற்ற அவர் கோழிகளை விற்பனை செய்து வாழ்ந்து வந்தார். வயது முதிர்ந்த நிலையில் ஓய்வாக இருக்கும் அவர் தற்போது கல்வி கற்க விருப்பம் கொண்டுள்ளார்.
அதற்காக பள்ளிக்கு சென்று எழுத படிக்க கற்று வருகிறார். முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடக்க கல்வி பயில தொடங்கினார். 4 ஆண்டுகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்துள்ளார்.
தற்போது நன்றாக எழுத படிக்க கற்றுக் கொண்டுள்ள பலேசியசி இதுகுறித்து தெரிவிக்கையில் :- எனது காதலர்களுக்கு ‘காதல் கடிதம்’ எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத படிக்க தொடங்கினேன். தற்போது என்னால் காதல் கடிதங்கள் எழுத முடியும்’ என நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
உயர்நிலை பள்ளி கல்வியை முதியோர் கல்வி திட்டத்தில் படிக்க முடியாது. எனவே டஸ்ட்லா குடியரஷ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டார். முதல் நாள் பள்ளிக்கு சென்ற அவர் தன்னை விட 80 வயது குறைந்த மாணவ மாணவிகளுடன் சகஜமாக பழகினார். பள்ளிக்கு சென்ற அவரை அனைவரும் கைதட்டி வாழ்த்தினர். தனது 100 ஆவது வயதுக்குள் உயர் கல்வியை முடிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.