நாமக்கல்…..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.
இவரது 15 வயதான மகன் ரிதுன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவனை 10 மணியளவில் பள்ளி ஆசிரியை திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் ரிதுனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் எந்த ஆசிரியரும் வெளியேறக்கூடாது என பள்ளியின் முன் முற்றுகையிட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் அறிந்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி மற்றும் வெப்படை போலீசார் கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என கூறி தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.